மீனால் முளைத்த அன்பு ! பகுதி 2: பாழாய்ப்போன மனசும், உடைந்த கண்ணாடிப் பாட்டிலும்
நீங்கள் இதை படிக்காதீர்கள் !
சமூக மாற்றத்திற்கான ஒரு சிறு விதை!
இந்தப் பாழாய்ப்போன மனசு இருக்கே... நம்மளைச் சுத்தி விட்டு வேலை பார்க்கும் மட்டுமில்லாமல், "ஏண்டா பண்றேன்?" என்று நமக்கே கேள்விக்குறியை மிச்சம் வைக்கும்.
அந்த சரக்... சரக்... சத்தம் என் மனசுக்குத்தான் முதலில் கேட்டது.
அது வேறு ஒன்றுமில்லை — சீவலைஸ்.
சீவலைஸ் பற்றி இப்போதைய தலைமுறைக்குத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.
தெரிந்துகொள்ள வாய்ப்பு இருந்தாலும், அவர்களுக்கு அதில் விருப்பம் இல்லை. மழைக்காலத்தில் மின்சாரம் போன வீட்டில் தவித்துக் கிடக்கும் ஒரு எளிய மெழுகுவர்த்திக்கும், நவீன எல்இடி (LED) பல்புக்கும் இருக்கிற அதே வித்தியாசம்தான் இதற்கும்.
சீவலைஸ் என்றால், ஒரு பெரிய பனிக்கட்டியை எடுக்க வேண்டும். தச்சுப் பட்டறையில் மரத்தைச் சீவுவதற்கு ஒரு இரும்புக்கருவி வைத்திருப்பார்களே, அதைப்போல ஒரு பெரிய கருவி அந்தக் கடையில் படுக்க வைக்கப்பட்டிருக்கும்.
அந்தப் பனிக்கட்டியை அதில் வைத்துச் சீவச் சீவ... அது துகள் துகளாக, சிவல் சிவலாக, பனிப்பொறி போலக் கீழே உதிரும். வெள்ளிப் பூக்கள் உதிர்வது போன்றதொரு மாயாஜால மயக்கம் அது.
நன்னாரி, எலுமிச்சம் பழம், ஃப்ளேவர், கலர் என எல்லாம் கலந்து, ஒரு கண்ணாடி டம்ளரில் அதைப்போட்டுக் கொடுப்பார்கள்.
ஃபலூடா எல்லாம் இப்போழுது வந்தது. ஆனால், அப்போதே எங்களுக்கு அதுதான் ஃபலூடா.
அதை வாங்கிச் சாப்பிடுவது தேவ அமிர்தம்.
பனியும் இருக்கும், ஜூஸும் இருக்கும்.
கோடை வெயிலில் திடீரென்று குளிர்ந்த காற்று வந்து முகத்தில் மோதுவது போன்ற ஒரு சுகம்.
அதை நோக்கித்தான் என் மனசு சென்றது, கூடவே என் கால்களும்.
அதனுடைய விளைவு என்ன ஆச்சுது தெரியுமா? கையில் இருந்த இருபது ரூபாயில் பத்து ரூபாய் காலி! பனிக்கட்டி மாதிரி — கையில் வாங்கினால் உருகும், சாப்பிட்டால் கரையும் என்பார்கள். இதுவோ, வாங்கும் முன்பே காற்றிலேயே கரைந்து விட்டது. சரி, போகட்டும்.
சீவலைஸின் சுவை இன்னும் நாக்கிலேயே இருந்தது; நல்ல தேனீர் குடித்த பின் வரும் ஒரு மெல்லிய இனிப்பு மாதிரி அது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. அந்த மறதியோடு மெதுவாக மீன் கடையை நோக்கி நடந்தேன்.
கடைக்காரர் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்.
அங்கிருந்த மீன்களெல்லாம் என்னைக் கேலியாகப் பார்ப்பது போல ஒரு உணர்வு.
ஒரு பெரிய கண்ணாடிப் பெட்டிக்குள் அடைபட்டுப் போனவை போலல்லாமல், சற்றும் சுதந்திரமற்ற நிலையில் இருந்தும், தங்களைச் சுதந்திரமானவை போலக் காட்டிக்கொண்டு அவை நீந்திக் கொண்டிருந்தன.
"என்ன தம்பி, இன்னைக்குத் தான் பள்ளிக்கூடம் இல்லையே? வீட்டில் சும்மா இருக்க முடியலையா?" என்றார் கடைக்காரர்.
நக்கலோ — இல்லை கேலியோ ,யூகிக்க முடியாத அந்த அப்பாவித்தனமான வயது அது.
அவர் சிரித்துக் கொண்டே சொன்னதன் பின்னால் இருந்த உலகியல் யதார்த்தம் எனக்கு அப்போது பிடிபடவில்லை. அப்பாவித்தனத்தின் உச்சம் அது.
அவர் சிரித்துக் கொண்டே சொன்னதற்கு நான் என்ன நினைத்திருக்க முடியும்? அந்த மீன்களைப் போல, கண்டும் காணாத மாதிரி சிரித்துக் கொண்டே, "மீன் வாங்க வந்திருக்கேன்" என்றேன்.
"சும்மா தமாஷு பண்ணாதீங்க தம்பி. அதைக் கேட்டுக் கேட்டு இந்த மீனுக்கே சலிப்புத்தான் வந்திருக்கும்" என்றார்.
அவர் சொன்னவுடன், நான் மீதமிருந்த பத்து ரூபாயை நீட்டினேன்.
அது ஒரு அம்பு மாதிரி என் கையிலிருந்து புறப்பட்டு அவர் முகத்தை நோக்கிச் சென்றது. அவர் முகத்தில் ஆச்சரியம் தாண்டவமாடியது.
"அவராவே வாங்கிக்கிட்டு... உனக்குத்தான் என்னைவிட மீன் விலை அதிகமா தெரியுமே? உனக்கு என்ன வேணும்?"
தயங்கித் தயங்கி, "கட்பீஸ்... ஒண்ணே ஒண்ணு!" என்றேன். ஒரு குருவி தன் கூட்டை விட்டுப் பறந்து செல்வது போல வார்த்தைகள் வெளியேறின.
அவர் சற்று யோசித்துவிட்டுக் கைப்பிடி வலையை எடுத்தார்.
ஒரு சிப்பாய் தன் துப்பாக்கியை எடுப்பது போல, தோள்களைச் சற்று நிமிர்த்திக் கொண்டார்.
அவர் எதற்காக அப்போது யோசித்தார் என்பது எனக்குப் புரியவில்லை.
அவருக்கு மீன் அவ்வளவு எளிதாகப் பிடிபடவில்லை.
அவரிடம் அது விளையாட்டுக் காட்டியது; தப்பித்துத் தொட்டிக்குள்ளேயே மறுபடியும் குதித்தது.
ஒரு சிறு குழந்தையிடம் மண்ணெண்ணெய் டப்பாவைக் கொடுத்து விளையாடச் சொன்னதைப் போன்று, அந்த மீன் அவரை முற்றுகையிட்டது.
அந்தச் சிறிய கைப்பிடி வலை, அந்த மீனுக்கு ஒரு மாயச் சுற்றுலா மைதானமாக மாறியிருந்தது.
அந்த விளையாட்டைப் பார்க்கவே, கிரிக்கெட் மைதானத்தில் அமர்ந்து ஆட்டத்தைப் பார்ப்பது போல இருந்தது.
களத்தில் உள்ள வீரர்கள் பந்தை விரட்டுவது போல, அந்த மீன் அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது.
ஒரு கட்டத்தில், கடைக்காரரின் வலையில் அது சிக்கியதும், மீன் துள்ளிக் குதித்து மேலே எழும்பியது — ஒரு கவியின் கைவண்ணத்தில் உருவான வில்லைப் போல வளைந்து!
எப்படியோ ஒரு வழியாகப் பிடித்துவிட்டார்.
அது சற்றுப் பெரிய மீனாக இருந்தது. ஒரு குட்டி முதலை மாதிரி அதன் உடல் ஒளிர்ந்தது. எனினும், அவர் உடனே அதை எனக்குக் கொடுக்கவில்லை. ஒரு கவரில் போட்டு, அந்த கவர் ஒழுகுகிறதா என்று பார்த்து உறுதிசெய்துகொண்டார். மற்ற யாருக்கும் அவர் இப்படிச் செய்ததாக எனக்கு நினைவில்லை.
இதுதான் அன்போ என்று கேட்டால் எனக்குத் தெரியாது. ஆனால், என் மேல் அவர் காட்டிய அந்தச் சின்னக் கரிசனம் என் மனதைத் தொட்டது.
தெரியாததைத் தெரிந்துகொள்ள, சந்தர்ப்பங்களும் காலங்களும் தான் தீர்மானிக்கின்றன.
அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், நான் கவரில் இருந்த மீனைப் பார்த்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன்.
மெல்லிய காற்று அந்த மீனின் வாசனையைச் சுமந்து சென்றது.
கடைத்தெரு வழியாக நான் நடக்கும்போது, சாலையில் மக்கள் தத்தம் வேலைகளில் சாதாரணமாகப் போய்க்கொண்டிருந்தனர்.
ஆனால், எனக்குத் தெரியாமல் கூடவே ஒரு பூனையும் நடந்து வந்து கொண்டிருந்தது.
அந்தப் பூனை, ஒரு தேர்ந்த வேட்டைக்காரனைப் போன்று தன் பார்வையை வேறெங்கும் திருப்பவில்லை.
நான் அதைக் கருணையோடு பார்த்தேன், ஆனால் அதுவோ என் கவரிலிருந்த மீனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.
அதன் கண்கள், 'நான் உன்னைச் சாப்பிடாமல் விடமாட்டேன்' என்ற வெறியில் இருந்தன.
அது அப்போது எனக்குத் தெரியவில்லை. ஆனால், கவருக்குள் இருந்த மீனுக்கு அது தெரிந்திருந்தது — ஒரு கைதிக்குத் தன் தண்டனை தெரிந்திருப்பதைப் போல.
தொட்டியில் இருந்தவரைக்கும் ராணுவ நடை போட்டுக் கொண்டிருந்த மீன் அது. கம்பீரமான குடியரசுத் தின அணிவகுப்புப் போல மெதுவாக நகர்ந்தது.
ஆனால், அந்தப் பூனையைப் பார்த்த பின்பு, கவரிற்குள் ஒரு கைதியைப் போல நடுங்க ஆரம்பித்துவிட்டது.
பூனை ஒவ்வொரு அடியிலும் நெருங்குவதை உணர்ந்த மீன், ராணுவத்திடம் மாட்டிய ஒரு நாட்டுப் பெண்ணைப் போலத் தவிக்கத் தொடங்கியது.
அந்த நிலை எனக்கு எதையோ உணர்த்தியது, ஆனால் என் சிறு வயது அறிவு அதை முழுமையாக உணரவில்லை. மழைக்குப் பின் வரும் வெள்ளத்தில் மேகம் மறைந்து போவதுபோல, என் புத்தி அப்போது சரிந்து போனது.
நாலு மூக்குச் சந்தையின் வலதுபக்கம் திரும்புகையில், அங்கே ஒரு நாய் நின்றிருந்தது. ரோமங்கள் சிலிர்த்து, வால் உயர்ந்து, அது பூனைக்கு ஒரு சவாலை விடுத்தது. நாயைக் கண்டதும் பூனை பதுங்கிக் கொண்டது. ஒரு பெரும் படையைக் கண்டு தற்காலிகமாக ஒளிந்து கொள்ளும் போர்வீரன்போல, பூனை மெதுவாகச் சுவரோரம் நகர்ந்து மறைந்தது.
மீன் மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்பியது. ஆனால், ஒரு நினைவூட்டலாக, அது இன்னும் பயத்தின் அடையாளத்தை விட்டுவிட்டுப் போனதுபோல, கவரின் ஓரம் சிறிது நனைந்திருந்தது.
பள்ளியில் உணவுச் சங்கிலி (Food Chain) பாடம் நடத்தும் போது எனக்குப் புரியவில்லை.
காலம் தன் காட்சிகளின் வழியாகப் பாடம் நடத்தி உணர்த்திய போதும் புரியவில்லை. மழைக்குப் பின் வரும் வெயில்போல, என் உணர்வுகள் பின்னோக்கிப் பயணிக்கின்றன.
மீண்டும் காலம் கடந்த பின்தான் அதை உணர்கிறேன் — வாய்ப்புகளின் கதவுகள் எப்போதும் நமக்காகத் திறந்தே இருக்கின்றன, நான்தான் உள்ளே நுழையச் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
வீட்டிற்குள் நுழைந்தேன்.
அங்கிருந்த கண்ணாடி ஹார்லிக்ஸ் பாட்டிலை எடுத்தேன். கை வழுக்கிக் கீழே விழுந்தது.
அது உடைந்த ஓசை, ஒரு உடைந்த கனவின் சத்தம்போல என் காதுகளில் எதிரொலித்தது.
கைத்தவறில் உடைந்து சிதறியது.
உடைந்த கண்ணாடியை ஒட்ட வைக்கலாம், ஆனால் அதன் விரிசல்கள் எப்போதும் உண்மையைப் பேசிக்கொண்டிருக்கும்.
அந்தப் பாட்டில் உடைந்தது வெறும் விபத்து அல்ல; அது ஒரு பழைய காலத்தின் முடிவு மற்றும் புதிய யதார்த்தத்தின் தொடக்கம்.
காலம் எப்போதுமே எதையாவது உடைத்துக்கொண்டுதான் நகர்கிறது, நாம் தான் சிதறல்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
காலம் சொல்ல வேண்டியதைச் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறது, நான்தான் அதைக் கவனிக்கத் தவறிவிட்டேன்.
மீன் இன்னும் அந்தக் கவருக்குள் துடித்துக்கொண்டே இருக்கிறது...
தொடரும்.
இது ஒரு தனி மனிதனின் குரல் அல்ல; சமூக மாற்றத்தை விதைக்கத் துடிக்கும் ஒவ்வொரு மனசாட்சியின் தேடல்.
நேர்மறையான மாற்றத்தை விரும்புபவர்கள் மட்டும் என்னுடன் இந்தப் பயணத்தைத் தொடரலாம்!
%20(1)%20(1).png)
கருத்துகள்
கருத்துரையிடுக